search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறி வியாபாரி"

    மேட்டுப்பாளையத்தில் காய்கறி வியாபாரியிடம் ரூ. 6 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    மேட்டுப்பாளையம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை 10.50 மணிக்கு மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது வாகனத்தின் சீட்டின் கீழ் பகுதியில் ஒரு கைப்பையில் ரூ. 5 லட்சத்து 98 ஆயிரம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    அவரிடம் விசாரித்த போது அவரது பெயர் அப்துல் ஹக்கீம் என்பது தெரிய வந்தது. அவர் மேட்டுப்பாளையம் -அன்னூர் சாலையில் புதிய மார்க்கெட்டில் காய்கறி மண்டி நடத்தி வருவதாக தெரிவித்தார்.

    இந்த பணத்தை ஊட்டி, கர்நாடக மாநிலத்தில் இருந்து மண்டிக்கு காய்கறி சப்ளை செய்த விவசாயிகளுக்கு கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் நிலையான கண்காணிப்பு குழுவினர் ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணம் வேண்டும். இது தொடர்பாக நீங்கள் தாசில்தார் அலுவலகத்தில் கூறுங்கள் என பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதனை தொடர்ந்து அப்துல் ஹக்கீம் மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகம் வந்தார். அங்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசன், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தாசில்தாருமான புனிதாவிடம் காய்கறி மண்டிக்கு காய்கறி சப்ளை செய்த விவசாயிகளுக்கு கொடுக்க தான் இந்த பணத்தை கொண்டு செல்கிறேன். பணத்தை கொடுக்காவிட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றார்.இதற்கான சில ரசீதுகளையும் காண்பித்தார். அவரிடம் அதிகாரிகள் தேர்தல் நன்னடத்தை விதிப்படி ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லக் கூடாது என்பதால் பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர்.

    இந்த பணத்தை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழுவிடம் ஒப்படைத்து விடுவோம். அங்கு உரிய ஆவணங்களை நீங்கள் காண்பித்து பணத்தை பெற்று கொள்ளலாம் என கூறிவிட்டனர். இந்த நிலையில் பறிமுதல் செய்யப்படட பணம் கோவையில் உள்ள கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.  #LSPolls

    அரியாங்குப்பத்தில் காய்கறி வியாபாரி மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலியான சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே இடையார்பாளையம் என்.ஆர். நகரை சேர்ந்தவர் காளியப்பன் (வயது81). இவர் தள்ளுவண்டி மூலம் காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் ரோட்டில் தள்ளுவண்டியை நிறுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது காளியப்பன் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட காளியப்பன் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த காளியப்பன் இன்றுகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    முன்விரோத தகராறில் காய்கறி வியாபாரியை வெட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த நித்தியானந்தம் மகன் அரவிந்த் (வயது 27). தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று அரவிந்த் வழக்கம் போல் வியாபாரம் செய்வதற்காக மார்க்கெட்டிற்கு வந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் அரவிந்தை சரமாரியாக வெட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பி சென்றனர். அவர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி மாகாலிங்கம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    விசாரணையில் தஞ்சை வடக்கு அலங்கம் கொடிமரத்து மூலை பகுதியை சேர்ந்த ராகுல் (வயது 22) என்பவரின் உறவினர்களுக்கும், அரவிந்த் உறவினருக்கும் இடையே ரூ.50 ஆயிரம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சணை இருந்து வந்தது. இதுநாளடையில் தகராறாக மாறி இவர்களுக்கு இடையில் முன்விரோம் இருந்து வந்தது. இதன்காரணமாக ராகுல் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சரவணன் (25). அமீன் (24), மற்றும் ஜெயசூரியன் (23) ஆகியோரின் உதவியுடன் அரவிந்தை அரிவாளால் வெட்டியதும் தெரியவந்தது.

    இதைதொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    தஞ்சையில் பொதுமக்கள் கூடும் மார்க்கெட்டு முன்பு வியாபாரியை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்குவாசல் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 27). இவர் தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் அரவிந்த், தனது மோட்டார் சைக்கிளில் மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மார்க்கெட் முன்பு வந்த போது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென வழிமறித்தனர்.பின்னர் அவர்கள் 4 பேரும், அரவிந்தை சர மாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு கை, கால்களில் வெட்டு விழுந்தது.

    இதனால் அரவிந்த் ‘ காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்..’ என்று கூச்சல் போட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் , குடும்ப பிரச்சினை காரணமாக அரவிந்த் மீது மர்ம கும்பல் வெட்டியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பட்டப்பகலில் பொதுமக்கள் கூடும் மார்க்கெட்டு முன்பு வியாபாரியை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    எட்டு லட்சம் ரூபாய்க்கு மின்சார கட்டணம் வந்ததால் மன வருத்தம் அடைந்த காய்கறி வியாபாரி தூக்கு போட்டு உயிரிழந்தது மகாராஷ்டிராவில் சோகத்தை ஏற்படுத்தியது. #ElectricityBill
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தின் புந்த்லிநகரில் உள்ள பாரத் நகரை சேர்ந்தவர் ஜெகநாத் ஷெல்கி (36). இவர் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தார். அவரது காய்கறி கடைக்கு மின்சார கட்டணமாக ஒவ்வொரு முறையும் ஆயிரம் ரூபாய் கட்டி வந்தார்.

    இந்நிலையில், இந்த மாத மின்சார கட்டணத்தை பார்த்தவர் அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு 8 லட்சம் ரூபாய்க்கு மின்சார கட்டணம் வந்திருந்தது. அதைக் கண்டதில் இருந்து மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். மின்சார வாரிய அலுவலகத்துக்கும் பலமுறை நடந்துள்ளார். ஆனால் எந்த பலனும் இல்லை. அவர்கள் அந்த தொகையை கட்டும்படி கூறிவிட்டனர்.

    இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.



    தகவலறிந்து அங்கு வந்த போலீசார், ஷெல்கி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது வீட்டில் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், மின்சார கட்டணம் அதிகமாக வந்த காரணத்தால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினார். விசாரணையில், மின்சார அலுவலக ஊழியர், மின்சார பயன்பாட்டு அளவில் குறித்துள்ள எண்ணில் ஒரு புள்ளியை மாற்றி வைத்ததுதான் இந்த குழப்பத்துக்கு காரணம் என தெரிய வந்தது. 

    இரண்டாயிரம் ரூபாய்க்கு வந்த மின்சார கட்டணத்தை 8 லட்சம் ரூபாய் என குறித்த மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் ஷெல்கி இறந்தது அவரது உறவினர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. 

    இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், மின்சார அளவில் தவறாக பதிவிட்ட ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டார் என தெரிவித்தனர்.

    ஆனால், அவரது உறவினர்கள் தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் வகையில் அவரது உடலை தகனம் செய்ய மாட்டோம் என்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. #ElectricityBill
    ×